ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளைக் காப்போம்! Save Adi Dravida Welfare schools

ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளைக் காப்போம்!


பெறுநர்,

மாண்புமிகு மு க ஸ்டாலின்
தமிழக முதல்வர்
தலைமைச் செயலகம்
சென்னை தமிழ்நாடு


பொருள்: ஆதிதிராவிட நல பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பதை தவிர்ப்பது தொடர்பாக


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் இயங்கிவரும் பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்று அண்மையில் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்து சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேசினார். எந்தவொரு விவாதமும் கணிப்புமின்றி தன்னிச்சையாக இப்படி அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவுச் சமூகம் அமைப்பு மூன்றுநாள் பொதுவிவாதத்தையும், கருத்துக்கணிப்பையும் நடத்தியது. அதனடிப்படையில் ஆதிதிரவிட நலத்துறைப்பள்ளிகள் தனித்து இயங்கவேண்டுமென்ற கருத்துகள் வலிமையாக முன்வைக்கப்பட்டன.

ஏனெனில் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் உருவான காரணிகள் வேறு: ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட காரணிகளும், சூழலும், நோக்கமும் வேறு. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என்பவை தொழிலாளர் நலப்பள்ளிகள், பஞ்சமர் பள்ளிகள், அரிஜனநலப்பள்ளிகள், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலப்பள்ளிகள் என நூற்றாண்டுகளைக் கடந்த, அன்றைக்கிருந்த சமூக வரலாற்றுக் காரணிகளின் தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்டவை. குறிப்பாக 1891 ஆம் ஆண்டு பண்டிதர் அயோத்திதாசர் 'பொதுப்பள்ளிகளில் பாகுபாடுகள் காட்டப்படுவதால் நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பொதுப்பள்ளிகளில் சேர்க்கமாட்டோம்; ஆகவே எங்களுக்கு தனிப்பள்ளிகள் தேவை' என்ற கோரிக்கையை காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பினார். இதே கோரிக்கையை தாதா இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் வலியுறுத்தினார். அதன் காரணமாக 7 மாணவர்கள் இருந்தாலே ஒரு தனிப்பள்ளியைத் தொடங்கலாம் என அன்றைக்கிருந்த ஆங்கிலேய அரசு அறிவித்தது. இப்படியாக பண்டிதர் அயோத்திதாசர் முதல் சுவாமி சகஜானந்தர் வரை திட்டமிட்டு உருவாக்கிய கல்வி அமைப்பு இன்று அதனுடைய நோக்கமும் தேவையும் நிறைவடையாமல் சிதைக்கப்பட சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக சகஜானந்தர் போன்றோர் தாங்கள் உருவாக்கிய பள்ளிகள் விடுதிகள், அதெற்கென சேர்த்துவைத்த சொத்துகள் அனைத்தையும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரில் ஒரு துறையை உருவாக்கும்போது அதெற்கெனக் கொடுத்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக அவர்கள் கொடுத்த பள்ளிகளையும் சொத்துக்களையும் பள்ளிக்கல்வித்துறையில் இணைப்பதென்பது பெரும் வஞ்சகமான செயலாகும். ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைக்கும்போது ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளின் சொத்து என்னவாகும்? பல கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் வணிகவளாகங்களாக அல்லது வேறு பயன்பாட்டிற்கு செல்லும் அபாயம் உள்ளது. ஆதிதிராவிட/பழங்குடியின மக்களின் நலத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட பள்ளிகளை/ பள்ளிகளின் சொத்துக்களை இன்று பள்ளிக் கல்வித்துறைக்குத் தாரை வார்ப்பது என்பது ஆதிதிராவிட/பழங்குடியின மக்களுக்களுக்கான சொத்துக்களை எடுத்து நேரடியாக மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதாக இருக்கிறது.

குறிப்பாக 833 ஆதிதிராவிடர் நலத்துறைத் தொடக்கப் பள்ளிகளில் 40,000 மாணவர்கள் படிக்கின்றனர். இவை அனைத்தும் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன. இச்சூழலில் ஆதிதிராவிடப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்த பிறகு ஆதிதிராவிட/பழங்குடியினருக்கான அருகமைப் பள்ளிகளின் நிலை என்னவாகும்? ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலப்பள்ளிகளில் தற்பொழுது பெரும்பாலும் பட்டியலின மாணவர்களே படித்து வருகின்றனர். நாளை பள்ளிக் கல்வித்துறையில் அவற்றை இணைக்கும் பொழுது பட்டியல் இன மாணவர்களுக்கான பிரதிநிதித்துவமும் சிறப்பு வாய்ப்புகளும் கிடைக்காமல் போகக்கூடுமல்லவா?

மேலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் 'இது நமக்கான பள்ளி' என்று நம்பிக்கையுடன் பயின்றுவரும் சூழலில், 'ஆதிதிராவிடர்' என்ற பெயர் மாற்றப்பட்ட பிறகு நம்பிக்கையிழப்பும் ஏமாற்றமும் உளவியல் பாதிப்பும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும். அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் எடுத்து பயிற்றுவித்து வரும் சூழலில் எவ்வித சாதியப் பாகுபாடுகளும் இல்லாமல் மன அமைதியுடன் கல்வி கற்று வருகின்றனர். இந்தச் சூழல் மாறும்போது மாணவர்கள் மேலும் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாவார்கள் அல்லவா? அதே சூழலில் வாழும் மாணவர்கள் அங்கேதான் படிப்பார்கள் என்ற நிலையில் 'அரசுப் பள்ளி' என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டால் பட்டியலல்லாத மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக மலைப்பகுதிக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் வேறு மாணவர்கள் வந்து படிக்கப் போவதில்லை. எனவே பெயர் மாற்றம் செய்துவிட்டால் சாதி ஒழியும் என்று கூறுவது சரியான கூற்றாகாது. அது ஒரு ஏமாற்றும் தந்திரம் அல்லவா?

ஆதிதிராவிடர் என்பது இழிவான சொல் என்ற கருத்தின் காரணமாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைப்பது என்பது மிக மோசமான உதாரணமாக; உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறதல்லவா?. இப்படியான கருத்துருவாக்கம் என்பது ஆதிதிராவிடர் என்றாலே இழிவானவர்கள் என்று அர்த்தப்படுத்துவதாக அமைகிறதல்லவா? மேலும் 'ஆதிதிராவிடர்' என்ற சொல்லை சாதிச் சொல்லாக கருதினால் 'திராவிடர்' என்ற சொல்லை நாம் என்னவாகக் கருத முடியும்? அதுமட்டுமல்லாமல் அதுவும் சாதியைக் குறிக்கும் சொல்லாகத்தானே அர்த்தப்படுத்தப்படுகிறது?! திராவிடர் எனும் இனவரைவியல் குறியீட்டுச் சொல்லை சாதிக் குறியீட்டுச் சொல்லாக அர்த்தப்படுத்துவதன் மூலம் என்ன சொல்லவருகிறார்கள்?

பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடப் பள்ளிகளை இணைக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணியாற்றும் ஆதிதிராவிட அல்லாத ஆசிரியர்கள், ஆதிதிராவிட மாணவர்களிடத்தில் எவ்விதத்திலும் பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களோ அல்லது ஆசிரியர்களோ அளிக்க முடியுமா?

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலப் பள்ளிகளில் ஒன்று முதல் 12 வரை படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்படுகிற நான்கு சீருடைகளும், 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல் மற்றும் வழிகாட்டி புத்தகங்களும், பொதுத்தேர்வு எழுதுகின்ற பத்தாவது பன்னிரண்டாவது படிக்கும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக கல்விச்சுற்றுலா செல்ல ஆண்டொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், சாரணர் இயக்கங்கள் நடத்துவதற்காக மூன்று வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிற 55 ஆயிரம் ரூபாயும், இதன் மூலம் மாணவர்களுக்கான இலவச சீருடையும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இவை யாவும் பறிக்கப்படுமல்லவா?

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலப் பள்ளிகளில் தற்பொழுது ஒன்று முதல் ஐந்து வரை (இடைநிலை கல்வியில்) முழுவதும் ஆதிதிராவிட ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், நாளை பள்ளிக்கல்வித்துறையில் இதனை இணைக்கும் பொழுது ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு 19% வேலை மட்டுமே வழங்கப்படும் என்ற அச்சம் எழுகின்றது. அதுபோக "பட்டியலின மாணவர்களுக்குப் பட்டியலின ஆசிரியர்கள்" என்ற உரிமைசார் வரலாற்றுச் சிறப்புத் திட்டமும் பறிபோக வாய்ப்பு உள்ளது அல்லவா? இன்னமும் மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் சாதியப்பாகுபாடு காட்டும் சூழல் இருக்கும்பொழுது; வேங்கைவயல் கொடூரங்கள் நடக்கும்போது "பட்டியல் மாணவர்களுக்கு பட்டியல் ஆசிரியர்கள்" என்ற பாதுகாப்பு, பள்ளிக்கல்வித்துறையால் பறிக்கப்படும் ஆபத்து ஏற்படுகிறதல்லவா?


ஒப்பீட்டளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் இன்று இடைநிற்றல் என்பது இல்லை என்றே சொல்லும் அளவிற்கு இடைநிற்றல் மிக சொற்பமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட மாணவர்களிடத்தில் இடைநிற்றல் இல்லை. ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களிடத்தில் பெரும் அளவில் இடைநிற்றல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்பட்டால் பட்டியலின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்குமல்லவா?

எனவே, சமூக ஏற்றதாழ்வும் சாதியக் கொடுமைகளும் ஒழிக்கப்படாத நிலையில், அன்றைக்கிருந்த தேவை இன்றளவும் நிறைவடையா நிலையில், சமூகத் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டமைத்த ஆதிதிராவிட நலப்பள்ளிகள் பறிபோவதைத் தடுப்போம். இட ஒதுக்கீடு தேவைப்படும்வரை நலப்பள்ளிகளும் தேவை என்பதை வலியுறுத்துவோம்.

எனவே, சமூக ஏற்றத்தாழ்வுகளும், சாதிக் கொடுமைகளும் ஒழிக்கப்படாத நிலையில், அன்றைய தேவை இன்றும் பூர்த்தியாகாத நிலையில், சமுதாயத் தலைவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கிய ஆதி திராவிட நலப்பள்ளிகளை இணைப்பை தடுப்போம். இடஒதுக்கீடு தேவைப்படுகிற வரை நலப் பள்ளிகளும் தேவை என்பதை வலியுறுத்துவோம்.

இவண்
ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள் நலக் கூட்டமைப்பு

assinar petição
assinar petição
O seu JavaScript está desativado. Sem ele, nosso site pode não funcionar corretamente.

política de privacidade

ao assinar, você aceita o termos de serviço da Care2
Você pode gerenciar suas assinaturas de e-mail a qualquer momento.

Está tendo algum problema?? Avise-nos.